புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை; ஒப்பிலியப்பன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
- 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
- பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் என அழைக்கப்படும் வேங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். மேலும், இக்கோவில் தென் திருப்பதி எனவும் போற்றப்படுகிறது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். வேங்கடாஜலபதி பெரு மாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்தும், துளசி மாலை அணிவித்தும் பெருமாளை வழிபட்டனர்.
சேங்கனூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
இதேபோல், திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் எனும் கிராமத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பதி பெருமாளை நேரில் காண்பது போலவே அமையப்பெற்ற சுயம்புவாக தோன்றிய சீனிவாச பெருமாள் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார்.
இத்த லத்தில் சக்கரத்தாழ்வார், விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது திருப்பதி சென்று வந்த பலனை தரும் எனவும் கூறுகின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி இன்று ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.