உள்ளூர் செய்திகள்

இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர் பலி- 3 பேரை தேடும் பணி தீவிரம்

Published On 2024-08-01 05:15 GMT   |   Update On 2024-08-01 05:29 GMT
  • மீனவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
  • மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுக ளில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகி றார்கள். அவ்வாறு கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையின் கெடுபிடியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோதும், எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விரட்டியடிக்கும் இலங்கை கடற்படை வீரர்கள், சில சமயங்களில் கொடூர தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அதேபோல் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களையும் சிறை பிடித்து செல்கிறார்கள்.

இந்தநிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப் படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. அதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித் துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

கண்ணை பறிக்கும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சிய வாறு வந்த கப்பலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், ஒலிபெருக்கி மூலம் இது இலங்கை கடற்பரப்பு. இந்த பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது. மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு மீனவர்கள் புறப்பட தயாரானார்கள்.

மேலும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப முயன்றனர். அப்போது கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை கொண்டு வேகமாக மோதினர். இதில் நிலைகுலைந்த மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.

உடனடியாக வேறு வழியின்றி படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா, முனியசாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு பேரும் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தனர். பின்னர் இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதற்கிடையே சற்று தொலைவில் மற்ற படகுகளில் மீன் பிடித்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது படகு மூழ்கியிருந்தது. கடலில் குதித்த மீனவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

மேலும் இதுகுறித்து படகின் படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான மீனவர்களையும், படகையும் கண்டுபிடித்து தருமாறு ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரியிடம் புகார் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News