மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிவு- காசிமேட்டில் 800 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன
- மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் இன்று வரை 61 நாட்கள் அமலில் உள்ளது.
- மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் இன்று நள்ளிரவே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
ராயபுரம்:
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் இன்று (14-ந்தேதி) வரை 61 நாட்கள் அமலில் உள்ளது.
இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் வழக்கமான உற்சாகத்துடன் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் செல்ல தயாராகி வருகிறார்கள்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 1100 விசைப்படகுகள், 1500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.
மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் இன்று நள்ளிரவே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து படகுகளில் ஐஸ்கட்டி, வலை, டீசல், ஒரு வாரத்துக்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதி 61 நாட்கள் தடைகாலத்திற்கு பின்னர் மீண்டும் சுறுசுறுப்பு அடைந்து உள்ளது. விசைப்படகுகளில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் குறைந்தது ஒருவாரத்திற்கு பின்னரே கரை திரும்புவார்கள். எனவே அடுத்த வாரம் முதல் காசிமேட்டில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.