உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே வெள்ளத்தில் சேதம் அடைந்த பாலாற்று தரைப்பாலம்- ரூ.4 கோடியில் சீரமைப்பு

Published On 2023-02-22 10:29 GMT   |   Update On 2023-02-22 10:29 GMT
  • 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
  • ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பாலாற்றின் குறுக்கே வாகன போக்குவரத்துக்கு வசதியாக, 25 ஆண்டுகளுக்கு முன் தரை மட்ட பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக காஞ்சிபுரத்தில் இருந்து, பிரமதேசம், ஆற்காடு, வேலுார் போன்ற பகுதிகளுக்கு பஸ் இயங்கி வருகிறது.

மேலும் இந்த ஆற்றுக்கு மறுகரையில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லை தொடங்குகிறது.

அதிகளவில் வட இலுப்பை, செய்யனுார், பேட்டை, பட்டரை, சித்தனகால், சீவரம், சிறுநாவல்பட்டு, பிரமதேசம், நாட்டேரி, கல்பாக்கம், தென்னம்பட்டு, புத்தனுார், ஐவர்தாங்கல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையின் போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது.

இந்த மண்சாலை மழைக்காலத்தில் தாக்கு பிடிக்காது என்பதால் இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய தரைமட்ட பாலம் 4 கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தண்ணீர் பிரிந்து செல்லும், பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News