3-வது நாளாக குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு
- குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நேற்று முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் இன்று காலையும் 3-வது நாளாக நீர்வரத்து சீராகாத நிலையில் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசாரால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடர்கிறது.
நேற்று இரவில் பழைய குற்றாலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அருவிக்கரைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் நின்றிருந்த 2 பனை மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.
இதில் அருகில் இருந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்து துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சாரல் மழை சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கி உள்ளது. அவ்வாறு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நாளை மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்த்த நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதியை எதிர்நோக்கி சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.