பறக்கும் படை சோதனை: பேக்கரி கடை உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறிமுதல்
- அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
- வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.