எஸ்டேட் பெண் தொழிலாளர்களை தாக்கிய கரடியை பிடிக்க வனத்துறை தீவிரம்
- இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் திரியும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு
- கரடி நடமாட்டம் குறித்து அறிந்தால் உடனடியாக தகவல் அளிக்க அறிவுறுத்தல்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்க எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் ஜித்தினி குமாரி (26), சுமத் குமாரி(25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி, இருவரையும் தாக்கியது. படுகாயமடைந்த இருவரும், வால்பாறை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஞ்சிப்பாறை எஸ்டேட் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்கள், தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கரடி நடமாட்டம் குறித்து தெரிந் தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.