கட்டக்கொம்பன் யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை- 4 கும்கி யானைகளுடன் பாதுகாப்பு
- யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது.
- யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி:
கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள பந்தலூா் இரும்புப்பாலம் மற்றும் இன்கோ நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடந்த சில நாட்களாக கட்டக்கொம்பன் என்ற யானை நடமாட்டம் இருந்து வருகிறது.
ஊருக்குள் புகுந்து வரும் யானையானது, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதோடு, விவசாயப் பயிா்களையும் சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது. எனவே இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமிலிருந்து வசீம், விஜய், பொம்மன், சீனிவாஸ் ஆகிய 4 கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டன.
கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் டிரோனும் பயன்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று வனத்துறையினர் டிரோன் பறக்க விட்டு அதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கினர்.
டிரோன் மூலம் யானை வருகிறதா என்பதை கண்டறிந்து, அதனை ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானை எங்கு இருக்கிறது என்பதை அறிந்ததும் வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.