முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு அனுமதி இலவசம்- கலெக்டர் அறிவிப்பு
- முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடைபெறவுள்ளது.
- அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் 2 தினங்கள் நடைபெற உள்ளது.
ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். எனவே பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.
மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.