உள்ளூர் செய்திகள்

ஐப்பசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல 13-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி

Published On 2024-11-10 04:41 GMT   |   Update On 2024-11-10 04:41 GMT
  • மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
  • இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி (15-ந்தேதி), பிரதோஷத்தை (13-ந்தேதி) முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 4 நாட்களில் மலையேற வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதி 11-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

பாலித்தீன் கேரிப்பை, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

வருகிற 16-ந்தேதி கார்த்திகை மாத பிறப்புன்று பக்தர்கள் வருகை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News