உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Published On 2022-08-31 09:34 GMT   |   Update On 2022-08-31 09:34 GMT
  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது
  • மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில் சன்னதி திடலில் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

நெல்லை:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட அதே இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 250 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாநகர பகுதியில் சுமார் 100 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரையிலும் சுமார் 75 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. டவுன், கருங்குளம், விளாகம், கருப்பந்துறை, பேட்டை உள்ளிட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில் சன்னதி திடலில் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அங்கு 4 நாட்கள் வழிபாடுகள் நடைபெறுகிறது.

மேலப்பாளையம் மருதுபாண்டியர் 1-வது தெருவில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை சிறுவர்கள் தள்ளுவண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பாதுகாப்பு

மாநகர பகுதியில் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவண குமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. சிலைகள் வைக்கும் இடங்களில் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும்.

அந்த பகுதியில் மின் விளக்கு வெளிச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் நாளையும், பெரும்பாலான இடங்களில் 4-ந்தேதியும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 250 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் மட்டும் 34 இடங்களில் பிரதிஷ்டைக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆழ்வார்குறிச்சி, புளியங்குடி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், பாவூர்சத்திரம், அச்சன்புதூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

செங்கோட்டை பகுதியில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 250 போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 500 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மாநகர பகுதியில் மட்டும் 100 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News