விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் தயாராகும் விநாயகர் சிலைகள்
- வருகிற செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி.
- 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.
கோவை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்று காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சிலை தயாரிப்பு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தெலுங்கு பாளையத்தில் விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் சக்திவேல் முருகன் என்பவர் கூறியதாவது:-
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் உள்ளிட்ட கலவைகளை கலந்து 2 அடி முதல் 10 அடி வரையிலான உயரம் மற்றும் அகலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.
எலியின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது, டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர், 2 மாடுகளை கொண்டு ஏர் கலப்பையுடன் உழவுப்பணியை மேற்கொள்ளும் விவசாயி வடிவம், நந்தி, மான், மயில், குதிரையில் அமர்ந்திருக்கும் விநாயகர், சிவன் சிலையை கையில் உயர்த்தி பிடித்திருக்கும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஒரு பக்கம் குபேரன், மறுபக்கம் லட்சுமி, நடுப்பகுதியில் விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பது போல விநாயகருடன் கூடிய சிலை, 6 கைகளுடன் கூடிய ரத்தின விநாயகர் சிலை, 5 முகம், மூன்று முகங்களுடன் கூடிய விநாயகர் சிலைகள் புதிய வரவாகும். மாசு ஏற்படுத்தாத வாட்டர் கலர் சிலைக்கு பூசப்படுகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிப்பு செலவும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.
அதிக உயர் கொண்ட சிலைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.500 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்துள்ளன. சதுர்த்தி விழா நெருங்கும்போது விற்பனை மேலும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு 2 அடி சிலை ரூ.1000, 3 அடி சிலை ரூ.2500, 4 அடி சிலை ரூ.4 ஆயிரம், 5 அடி சிலை ரூ.6500, 7 அடி சிலை ரூ.11 ஆயிரம், 8 அடி சிலை ரூ.18 ஆயிரம், 9 அடி சிலை ரூ.20 ஆயிரம், 10 அடி சிலை ரூ.27 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.