உள்ளூர் செய்திகள் (District)

கல்லூரி மாணவர்களை தாக்கிய கும்பல்.

நாகை அரசு கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல்; மாணவர்களை தாக்கியதால் பரபரப்பு

Published On 2023-02-28 08:13 GMT   |   Update On 2023-02-28 08:13 GMT
  • பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.
  • தாக்குதலில் மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் அவரது அறையில்வைத்து கண்டித்துள்ளார்.

அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.

ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல் திடீரென கல்லூரி மாணவர்களை தாக்க தொடங்கினர்.

கல்லூரி மாணவர்களை வெளி பகுதியை சேர்ந்த கும்பல் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபடும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலில் மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News