அருப்புக்கோட்டையில் கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்கு முடக்கம்
- வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லெக்குசாமி, அஜித்குமாரை மறித்து சோதனையிட்டபோது 21 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது.
- லெக்குசாமி, அஜித்குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த லெக்குசாமி (வயது 24) என்பவர் அடிக்கடி கஞ்சா கடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் லெக்குசாமி தனது கூட்டாளி சின்ன புளியம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவருடன் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லெக்குசாமி, அஜித்குமாரை மறித்து சோதனையிட்டபோது 21 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக அருப்புக்கோட்டையில் உள்ள லெக்குசாமியின் அரசு வங்கி கணக்கை முடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி லெக்குசாமியின் வங்கி கணக்கில் உள்ள ரூ. 7 லட்சத்து 32 ஆயிரத்து 708-ஐ போலீசார் முடக்கம் செய்தனர்.