உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீதாஜீவன்

Published On 2024-08-18 09:38 GMT   |   Update On 2024-08-18 09:38 GMT
  • சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி.
  • கலெக்டர் அலுவலகங்களில் விண்ணபிக்க பெண்கள் குவிந்தனர்.

தூத்துக்குடி:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் சுமார் 1½ கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 மாதந்தோறும் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களில் சிலரது விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகங்களில் விண்ணபிக்க பெண்கள் குவிந்தனர். இதை அறிந்த அதிகாரிகள் இது தவறான தகவல் என தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்து சில இடங்களில் அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதலில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்கள் செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடும்போது 1½ கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தற்போது 1 கோடியே 18 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் வரும் காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு முதல்-அமைச்சர் உரிய முடிவு அறிவிப்பார். மகளிர் உரிமைத்தொகை குறித்து சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் செய்தி போலியான தகவல். வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்த இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்படும். இதுதொடர்பாக பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News