நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்- ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
- செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற சந்தையாகும். இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். இங்கு சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.
இந்நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று காலை முதல் வியாபாரம் தொடங்கியது. இதற்காக வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.9 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. அதேபோல் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை விற்பனையானது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம்வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவத்தனர்.
கடந்த ஆண்டு ரூ.6 கோடி விற்பனையான நிலையில் ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால் விற்பனை இந்தாண்டு சற்று குறைந்து காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் கேட்டபோது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலை அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு முந்தைய வாரங்களில் நடைபெற்ற சந்தைகளில் ஆடுகளை வாங்கியதால் இன்று விற்பனை குறைவாக இருந்தது என தெரிவித்தனர்.