உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மகாபெரியவருக்கு வைரக்கல் பதித்த தங்க நகை காணிக்கை- வெளிநாட்டு பக்தர்கள் வழங்கினர்

Published On 2023-02-12 07:31 GMT   |   Update On 2023-02-12 07:31 GMT
  • மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
  • உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் திருஉருவச் சிலைக்கு வெளி நாட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வைரக்கல் பதித்த தங்க கை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி யாக உள்ள ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். இவரது ஜெயந்தி உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த 3 நாட்களும் வேதபாராயணம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியன சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி விஜயேந்திரரின் பிறந்த நாளும் அதே நாளில் சிவராத்திரி விழாவும் சங்கர மடத்தில் கொண்டாடப்படுகிறது.

அன்றைய நாளில் சங்கர மடத்தின் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் ஒன்றிணைந்து மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதியில் இருந்து வைரக்கை பக்தர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சங்கர மடத்துக்கு வந்து சேரும்.

இதன் பின்னர் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் மகாபெரியவர் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

விஜயேந்திரர் ஜெயந்தி நாளன்று அவர் முகாமிட்டுள்ள விசாகப்பட்டினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News