உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்கள் தனியார் மயமாக்கப்படாது-அமைச்சர் சிவசங்கர்

Published On 2024-07-29 07:07 GMT   |   Update On 2024-07-29 07:07 GMT
  • 7200 புதிய அரசு பஸ்கள் வாங்க நடவடிக்கை.
  • அரசியல் கட்சியினர் புகார்.

கடலூர்:

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரானேன். இன்று எங்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாய்தா ஆகஸ்டு 3-ந்தேதி நடைபெற உள்ளது.

போக்குவரத்து துறை எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கபடாது. ஏனென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது 7200 புதிய அரசு பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதில் முதற்கட்டமாக ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டங்களாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் தனியார் மயமாக்க மாற்ற எண்ணினால் குறைந்த காலத்தில் அனைத்து பஸ்களும் வாங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவர், கண்டக்டர் பணிக்கு 685 பேர் பணிக்கு எடுத்து அவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும் மற்ற போக்குவரத்து பணிமனைக்கும் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் ஒரு புகார் தெரிவிக்க வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் காலம் 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தி விட்டனர். ஏனென்றால் ஓய்வு காலத்தில் சரியான முறையில் அவர்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் உள்ளிட்ட எந்த ஒரு பலன்களும் அவர்களுக்கு வழங்க முடியாத நிலையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு இருந்தது.

கடந்த மே மாதம் அதிகளவில் போக்குவரத்து துறையில் ஊழியர்கள் ஓய்வு பெற்று உள்ளனர். இதனை சமாளிக்கும் விதமாக இடைக்கால நிவாரணமாக ஒப்பந்த அடிப்படையில் டிரைவர் மற்றும் கண்டக்டர் நியமிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக கடந்த கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் மக்கள் சென்று வருவதால், தற்போது பஸ்கள் இயக்கம் அதிகரித்து வருகின்றது.

மேலும் சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால் அந்தந்த பகுதிகளுக்கு தேவையானபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இது மட்டுமின்றி தற்போது மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரம் வரை செல்லாமல் தற்போது கூடுதலாக பல்லாவரம் வரை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் , கடந்த ஒரு மாதத்திற்கு முன்புடி.டி.வி. தினகரன் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுகின்றது என தெரிவித்து இருந்தார்.

அதனை பார்த்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானும் சொல்லாமல் இருக்க கூடாது என்ற நோக்கில் போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட முயற்சி செய்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

டி.டி.வி.தினகரன் அரசு தொடர்பாக என்ன நடைபெறும் என தெரியாமல் பேசி உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்து உள்ள நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஓட்டுனர், நடத்துனர் புதிதாக பணிக்கு எடுக்கவில்லை.

ஆனால் தற்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் 685 அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் எடுக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்று பேசி வருகிறார்.

மேலும் இந்த அறிக்கைகள் வந்து ஒரு மாதம் கழித்து தூங்கி எழுந்து பேசுவது போல் சீமான் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

அவருக்கு தெரிந்தது இலங்கை மற்றும் ஈழத்தில் நடக்கும் பிரச்சனை மட்டுமே. தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டுமானால் அதற்கு முன்பாக ஆட்சியில் என்னென்ன நடக்கின்றது என்பதனை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

தற்போது ஒரு சில தொழிற்சங்கங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் தனியார் மயமாக்கப்படுகின்றது என தொடர்ந்து குற்றச் சாட்டை வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News