சூலூர் விமான படை ஆயுத கிடங்கு அமைக்க மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
- சூலூர் விமானப் படை தளத்தின் ஆயுத கிடங்கு மற்றும் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- அளவீடு பணி மேற்கொள்ள வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஆட்சேம் தெரிவித்தனர்.
பல்லடம்:
கோவை,திருப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சூலூர் விமானப் படை தளத்தின் ஆயுத கிடங்கு மற்றும் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86 ஏக்கர்38 சென்ட் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான நில அளவீடு, வீட்டுமனைகள், விளை நிலங்கள், மரங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அளவீடு பணி மேற்கொள்ள வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஆட்சேம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 3ந் தேதி பல்லடம் அருகேயுள்ள சங்கோதிபாளையத்தில் விமான தள விரிவாக்க பணி சம்பந்தமான பொதுமக்கள் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சூலூர் விமானப் படை தளம் அருகில் இருப்பதால் விரிவாக்கம் செய்யும் போது நிலத்தை கையகப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் கடந்த பல ஆண்டுகளாக யாரும் நிலம் வாங்க முன்வரவில்லை. இதனால் அரசின் நில வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது. இதன் சந்தை மதிப்பு ஏக்கருக்கு ரூபாய் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆக கூடியது தடைபட்டுள்ளது. அரசின் நில இழப்பீடு சட்டத்தின்படி இப்பகுதி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.2கோடியே 91 லட்சம் வழங்கிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்படியும், ஜனநாயக முறைப்படியும் போராட்டங்கள் நடத்திடவும், இக்கோரிக்கைகளை பிரதமர், முதல்வர், மத்திய,மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு மனுவாக அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே சங்கோதிபாளையத்தில் நிலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் செந்தில்வேல்,மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோடங்கிபாளையம் காவீ.பழனிசாமி, பருவாய் ரவிச்சந்திரன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பருவாய் சக்திவேல், சுப்பிரமணியம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்பகுதியில் பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது இவர்களது வாழ்வாதாரமே கேள்விகுறியாகும். சூலூர் விமான படை தளத்திற்கு அருகாமையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் இருக்கும் போது விவசாய நிலத்தை ஏன் அரசு கையகப்படுத்த வேண்டும். விவசாயத்தை அழிக்காமல் மாற்று இடமாக தரிசு நிலம் இருப்பதை மாநில அரசு கவனத்தில் கொண்டு அதனை கையகப்படுத்த வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.முன்னதாக சர்வே செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களை அவர்கள் பார்வையிட்டனர்.