உள்ளூர் செய்திகள் (District)

சிதம்பரம் நடராஜர் கோவிலை அபகரிக்க அரசு திட்டம்-எச்.ராஜா

Published On 2024-10-10 05:38 GMT   |   Update On 2024-10-10 05:38 GMT
  • அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.
  • தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில்.

சிதம்பரம்:

சிதம்பரத்தில் பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய பொதுதீட்சிதர்களுக்கு உரிமை அளித்துள்ளது. இதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

இருந்தாலும் இந்த கோவிலின் சொத்துக்கள் 1976-ம் ஆண்டிலிருந்து தனி தாசில்தாரால் பராமரித்து நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிலங்கள் பொதுதீட்சிதர்களிடம் கிடையாது.

2006-ல் உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, இந்த கோவில் நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கரிலிருந்து கோவிலுக்கு வரும் நிதி சொற்பமாக உள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார். அரசு கோவில் நிலங்களில் இருந்து வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் கொடுக்கிறது.

தற்போது திடீரென அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.

1976- ஆண்டிலிருந்து நிலங்கள் உங்களிடம் உள்ளது. எப்படி விற்க முடியும். இடையில் 2006-லிருந்து 2014 வரை அரசாங்கத்திடம் இருந்தது. 2006-ல் கருணாநிதிஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பொதுதீட்சிதர்களிடம் இருந்து, அரசாங்கம் எடுத்துக்கொண்டது.

2014 உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் மீண்டும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் வந்தது. ஆனால் இன்னமும் நிலங்கள் தனி தாசில்தார் பொறுப்பில் உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி விற்க முடியும். இதற்கான ஆதாரத்துடன் கோவில் வக்கீல் சந்திரசேகர் மற்றும் தீட்சிதர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் நிலங்கள் எங்களிடம் உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அளித்துள்ளார். 22,600 கட்டடங்கள், 33,600 மனைக்கட்டுகள் உள்ளது என கூறுகிறார்.

இவ்வளவு கோவில் சொத்துக்களை வைத்துக் கொண்டு தற்போதைய நிலவரப்படி வரி வசூலிக்க வேண்டும். அப்படியென்றால் வருடத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வர வேண்டும். ஆனால் வசூலிக்கவில்லை.

7-6-2021 சுயமோட்டோ வழக்கில் நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் வரி வசூலிக்கவில்லை என தீர்ப்பு அளித்துள்ளனர். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எப்படியாவது பொய்யை சொல்லி நடராஜர் கோவிலை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கமாகும்.

அரசு கோவிலை அபகரிக்க சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டுகிறோம். நடராஜர் கோவிலில் தரிசன கட்டணம் கிடையாது. அபிஷேக கட்டணம் கிடையாது. உண்டியல் கிடையாது. அரசு தனி தாசில்தாரிடம் உள்ள நிலங்களை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில். தரிசனம் கட்டணம் இல்லாத கோவில்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News