உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவி ஒருவருக்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி பட்டம் வழங்கிய போது எடுத்த படம்.

பட்டம் பெற்ற மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் - நிப்ட்-டி கல்லூரி விழாவில் மாநகராட்சி கமிஷனர் பேச்சு

Published On 2022-06-27 11:25 GMT   |   Update On 2022-06-27 11:25 GMT
  • நிப்ட்-டி கல்லூரியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான சவால்கள் குறைவாக உள்ளன.
  • கல்லூரியில் விரைவில் அமையவுள்ள டிசைன் ஸ்டுடியோ திருப்பூருக்கு இன்னுமொரு மைல்கல்லாக அமையும்.

திருப்பூர் :

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நிப்ட்-டி பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2015-2018 கல்வியாண்டில் பயின்ற இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டய படிப்பு மாணவர்கள் 532 பேருக்கு பட்டங்கள், பட்டயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனா். கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

அப்போது, சமுதாயத்தில் எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில் படிக்க வாய்ப்பு பெற்று படித்து, பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். நிப்ட்-டி கல்லூரியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான சவால்கள் குறைவாக உள்ளன. கல்வித்துறையில் பலவித சவால்கள் இருந்தாலும் நாளை தலைவர்களை, தொழிலதிபர்களை உருவாக்கும் துறை சார்ந்த கல்வியை வழங்கும் இதுபோன்ற கல்வி நிலையங்களில் பயில்வது என்பது மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. திருப்பூரில் இன்று தொழிலாளியாக இருப்பவர்கள் நாளைய முதலாளி என்கிற நிலையை அடைவதற்கு வாய்ப்பு அமைந்துள்ள நகரமாக இருக்கிறது.

அப்படி வளர்ந்துதான் இவ்வளவு பெரிய இடத்தை திருப்பூர் பிடித்துள்ளது. அதற்கு நிப்ட்-டி போன்ற கல்வி நிலையங்களும் உறுதுணையாக அமைந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. மேலும் இந்தக் கல்லூரியில் விரைவில் அமையவுள்ள டிசைன் ஸ்டுடியோ திருப்பூருக்கு இன்னுமொரு மைல்கல்லாக அமையும். பட்டம் பெற்ற மாணவர்கள் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் பி.மோகன், கல்லூரி தலைமை ஆலோசகர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், கல்லூரியின் முன்னாள் தலைவர் சி.எம்.என்.முருகானந்தன், கல்லூரியின் துணைத்தலைவர்கள் என்.ரங்கசாமி, கே.வாசுநாதன், பொருளாளர் ஆர்.கோவிந்தராஜு, பொதுச்செயலர் ஈ.பழனிசாமி, துணைச்செயலர் மற்றும் கல்வித்துறை தலைவர் ஆர்.ஆர்.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் என்.சண்முகம், சிறப்பு அழைப்பாளர் கே.கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News