9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு
- தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலங்கொம்பு அரசு பள்ளியில் 7,8, 9-ம் வகுப்புகளில் படித்து வரும் 9 மாணவிகளுக்கு அந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் புகார் அளித்தும், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள் அதனை கண்டு கொள்ளாமல், அதற்கு உடந்தையாக இருந்தாகவும் தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா அளித்த புகாரின் பேரில் போலீசார் இடைநிலை ஆசிரியர் நடராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் சம்பவம் தெரிந்தும், புகார் அளிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியைகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடராஜன் ஒரு வாரத்திற்கு முன்பே சஸ்பெண்டு செய்யப்பட்டு விட்டார்.
அதனை தொடர்ந்தே அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆசிரியர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.