மாணவியிடம் கிண்டல்: தட்டிக்கேட்ட வாலிபரை வீடுவரை சென்று மிரட்டிய கும்பலை சுற்றி வளைத்து தாக்கிய பொதுமக்கள்
- பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார்.
- கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மாலை பள்ளி முடிந்து மாணவி ஒருவர் அப்பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் . அப்போது மாணவியை பினதொடர்ந்து 3 வாலிபர்கள் வந்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள் மாணவியை கிண்டல் செய்தபடியும், தங்களிடம் பேசும்படியும் வற்புறுத்தினர்.
இதனை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தட்டிக்கேட்டார். அவர் போதை கும்பலை எச்சரித்தார். இதனால் அந்த வாலிபருக்கும் போதை கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மாணவி அங்கிருந்து அச்சத்துடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல் தங்களை தட்டி கேட்ட வாலிபரை பின்தொடர்ந்து அவரது வீடுவரை சென்று மிரட்டினர். மேலும் அங்கு நின்று ரகளையில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் போதை வாலிபர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர், வரமறுத்து அங்கிருந்து கண்காணிப்பு கேமரா கம்பத்தில் தனது தலையை மோதி ஆவேசம் ஆனார். பின்னர் ஒருவழியாக போதை வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் அழைத்து சென்றனர். விசாரணியில் பிடிபட்டவர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் ஷியாம், தீனா என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். நான் விரைவில் திரும்பி வருவேன், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தினந்தோறும் இந்த பகுதியில் போதை வாலிபர்கள் மாணவிகள் மற்றும் பெண்களை கிண்டல் செய்வது அதிகரித்து உள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்து அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டும் இதே பகுதியில், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விசாரணைக்காக சென்றபோது கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.