பலத்த மழை: டெல்லி-சென்னை இடையே 4 விமானங்கள் ரத்து
- டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.
மீனம்பாக்கம்:
டெல்லியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை-டெல்லி இடையே தினமும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 22 விமானங்கள் இயக்கப்படும். இதில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 9 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னை வரக்கூடிய 9 விமானங்களும் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.
ஆனால் டெல்லி விமானங்கள் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னை-டெல்லி இடையே செல்லக்கூடிய மற்ற விமான நிறுவன விமானங்கள் பாதிப்பின்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.