உள்ளூர் செய்திகள்

இரவில் பெய்த கனமழை: பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதி

Published On 2024-11-01 07:20 GMT   |   Update On 2024-11-01 07:20 GMT
  • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள தால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் இன்று காலையில் குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி பகுதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்து வரும் நிலையில் போலீசார் அருவிப் பகுதிகளில் கயிறுகள் கட்டி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து சீரானதையடுத்து இன்று காலை முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள தால் தீபாவளி விடுமுறையையொட்டி அருவிகளில் குளித்து மகிழ வந்த சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றால அருவியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

காலையில் மழை பொழிவு குறைந்து தண்ணீர் வரத்தும் மற்ற அருவிகளிலும் சீராகும் பட்சத்தில் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News