உள்ளூர் செய்திகள் (District)

கனமழை- வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் மக்கள் தவிப்பு

Published On 2023-11-15 07:00 GMT   |   Update On 2023-11-15 07:00 GMT
  • கடந்த 2 நாட்களாக பலத்த மழைபெய்து வருகிறது.
  • சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

பொன்னேரி:

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழைபெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு, பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முடியாததால் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து செல்கிறார்கள். பொன்னேரி ரெயில் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் முடிக்கப்படாததால் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கடபுரம் சாஸ்திரி தெரு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. துரைசாமி நகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மழைகால முன்எச்சரிக்கையாக மின்மோட்டார், நீர் மூழ்கி மோட்டார், 500 மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், ஜே.சி.பி. எந்திரங்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி ஆணையர் கோபிநாத் தெரிவித்து உள்ளார். இன்று காலையும் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

Tags:    

Similar News