உள்ளூர் செய்திகள் (District)

கனமழை எதிரொலி: ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் 2 நாட்கள் ரத்து

Published On 2024-05-19 07:20 GMT   |   Update On 2024-05-19 07:20 GMT
  • ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
  • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதனால் நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், இருப்பு பாதை பிரிவு பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News