குன்னூரில் சூறாவளியுடன் பலத்த மழை: மின்கம்பியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது.
- மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த ஒருவாரமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் அங்குள்ள போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்வதால் அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே குன்னூர் அடுத்த உபதலை-பழத்தோட்டம் சாலையில் நேற்று ராட்சத மரம் மின்கம்பி மீது விழுந்ததால் அந்த வழித்தடத்தில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மின்வாளால் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும் அங்குள்ள பெரும்பாலான விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மழையின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டம், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.