உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் கனமழை: 3 தாலுகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2024-12-02 04:26 GMT   |   Update On 2024-12-02 04:26 GMT
  • பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
  • இன்று, நாளையும் 2 நாட்கள் மலைரெயில் ரத்து.

ஊட்டி:

வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல், தமிழகத்தை நெருங்கி வந்து, புதுச்சேரியில் கரையை கடந்தது.

புயல் தாக்கம் காரணமாக மலை மாவட்டமான நீலகிரியிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

நேற்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது.

நேற்று மாலை ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் ஊட்டி நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய, கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழைக்கு, ஊட்டியில் ரெயில்வே போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது.

இதேபோல் ஊட்டி பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள ரெயில்வே பாதையிலும் மழைநீர் அதிகமாக தேங்கியது. பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தார்கள்.

ரெயில்வே பாதையில் தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் காலையில் வேலைக்கு செல்வோர் குடைபிடித்தபடியும், ஜர்க்கின் அணிந்தபடியும் பயணித்தனர்.

ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதுமே பலத்த மழை பெய்தது. காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

மழையுடன் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரும் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் பயணிப்போர் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களையும் கண்டு ரசித்தனர்.

நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட 3 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார் மற்றும் கொடநாடு பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

கூடலூர் பஜார்-73, கொடநாடு-71, கிளைன்மார்கன்-59, அப்பர் கூடலூர்-52, ஊட்டி-40, தேவாலா-39, பார்வுட்-35, கீழ்கோத்தகிரி-33, கேத்தி-32, செருமுள்ளி, வுட் பெரியார் எஸ்டேட்-30, கோத்தகிரி-27.

இதற்கிடையே நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-குன்னூர், குன்னூர்-ஊட்டி இடையே இன்று, நாளையும் என 2 நாட்கள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News