சேலத்தில் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதி
- சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- 4 நாட்கள் கன மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
இேதபோல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. சேலம் மாநகரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை 9 மணி வரை கன மழையாக கொட்டியது. பின்னர் மழை தூறலாக நீடித்தது.
இதனால் மாநகரில் சில பகுதிகளில் சாலைகளில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நேற்றிரவு பெய்த கன மழையால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் பஸ் ஏற முடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
அதே போல சேலம் 4 ரோடு, 5 ரோடு, பழைய பஸ் நிலையம், கொண்ட லாம்பட்டி, ஜங்சன், அம்மாப்பேட்டை, கொண்ட லாம்பட்டி, கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி நெத்திமேடு, அன்னதானப்பட்டி, தாதகா ப்பட்டி என மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடையும் கலந்து புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தூங்க முடியாமல் விடிய விடிய கடும் அவதி அடைந்தனர்.
சேலம் காந்தி விளையா ட்டு மைதானத்தில் அதிக அளவில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் அங்கு நடை பயிற்சி சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி-சாந்தி என்பவரின் ஓட்டு வீடு மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த சேலம் டவுன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று இடுபாடுகளை அகற்றினர். இதில் வீட்டில் உள்ளவர்கள் வேறு அறையில் படுத்து இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு 8 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை கன மழையாக கொட்டியது. இந்த மழையால் ஏற்காட்டில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் ஏற்காட்டில் மலைப்பாதைகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது கண் கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த திடீர் அருவிகளில் ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
மேலும் ஏற்காடு அடிவாரப்பகுதியில் உள்ள 3 தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. இந்த தண்ணீர் வாணியங்காடு வழியாக கன்னங்குறிச்சி புது ஏரிக்கு வருகிறது. இதனால் புது ஏரி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளதுடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக ஏற்காட்டில் இரவு 8 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. இன்று காலை 9 மணி வரை மின் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆனை மடுவு, ஆத்தூர், கரியகோவில், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது .
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காடடில் 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 65.7, ஆனைமடுவு 39, ஆத்தூர் 28, கெங்கவல்லி 8, தம்மம்பட்டி 6, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 72, சங்ககிரி 37, எடப்பாடி 61.4, மேட்டூர் 58.4, ஓமலூர் 46, டேனீஸ்பேட்டை 27 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 535,5 மி.மீ. மழை பெய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, நாமக்கல் நகரம் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செங்கோட்டில் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமாரபாளையம் 6.8, மங்களபுரம் 17, மோகனூர் 22, நாமக்கல் 38, பரமத்தி 31, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 6.6, சேந்தமங்கலம் 9, கலெக்டர் அலுவலகம் 12, கொல்லிமலை 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 224.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதற்கிடையே தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை மேலும் 4 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.