உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் கன மழை: மஞ்சளாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2024-09-29 05:24 GMT   |   Update On 2024-09-29 05:24 GMT
  • இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.
  • அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

ஏற்கனவே மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி 30 நாட்களுக்கும் மேலாக அதே நிலையில் நீடிக்கிறது.

அணைக்கு நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 184 கனஅடியாக அதிகரித்தது. 184 கன அடி நீரை அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சளாற்று கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதேபோல் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து வந்தது.

இதனிடையே பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை முதல் கன மழை பெய்தது.

எ.புதுப்பட்டி, வடுகபட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.

மேலும் சின்னமனூர், பாளையம், கோம்பை, கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

முல்லைப்பெரியாறு அணை 126.25 அடியாக உள்ளது. அணைக்கு 570 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

3888 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.25 அடியாக உள்ளது. 1441 கன அடி நீர் வருகிறது.

மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1199 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3097 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 17.4, தேக்கடி 12.6, கூடலூர் 8.4, சண்முகாநதி அணை 8.6, உத்தமபாளையம் 5.6, வீரபாண்டி 2, வைகை அணை 38, மஞ்சளாறு 61, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 17 மி.மீ மழை அளவு பதிவானது.

Tags:    

Similar News