உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் - பயணிகள் கடும் அவதி

Published On 2023-11-24 08:58 GMT   |   Update On 2023-11-24 08:58 GMT
  • பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
  • நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆலங்குளம்:

நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாலப்பணிகள்

ஆலங்குளம் தொட்டி யான்குளம் கரைப் பகுதியில் பாலப் பணிகள் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பாலம் வேலை நடைபெறும் இடங்களில் வாகனங்கள் சென்று வர நெடுஞ்சாலைத்துறையினர் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் இரு இடங்களிலும் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கை களைக் கண்டு கொள்ளவில்லை என கூறினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இப்பகுதியில் பெய்த கன மழையால் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் சாலை வலுவிழந்து சேதமடைந்தது. இதனால் இரு வாகனங்கள் சென்று வர வேண்டிய இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சாலையில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு ஒரு புறமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக 5 கி. மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்து சென்றதால் நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இரவானதால் சாலையை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து இரவில் போலீசார் அப்பகுதியில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை யின் பெரும் அலட்சியத்தால் ஆலங்குளத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர் என வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News