உள்ளூர் செய்திகள்

இனிமேல் 5 ஆயிரத்துக்குமேல் மின் கட்டணம் என்றால் டிஜிட்டல்தான்: மின்சார வாரியம் அதிரடி உத்தரவு

Published On 2024-08-21 03:00 GMT   |   Update On 2024-08-21 03:00 GMT
  • ரூ.5 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
  • ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

சென்னை:

தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. அதில் சுமார் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை என இதர இனங்களை சேர்ந்தவையாகும்.

இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது.

இந்த மின் கட்டணத்தை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு (2023-24) மட்டும் மின்சார வாரியம், மின்பயன்பாடு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் ரூ,60 ஆயிரத்து 505 கோடி வசூல் செய்துள்ளது.

அதில் ஆன்லைன் மூலமாக மட்டும் ரூ.50 ஆயிரத்து 217 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதாவது மொத்த வசூலில் இது 83 சதவீதமாகும். இது 2022-23-ம் ஆண்டு இருந்த 52 சதவீதத்தில் இருந்து 31 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது. எனவே தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ,20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்பின் இது ரூ,10 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் 83 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ,10 ஆயிரம் என்ற ரொக்கம் இனி ரூ.5 ஆயிரமாக அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி மின் அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

ஆனால் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இருப்பிமும் ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தும் போது சில வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

அதற்கு பதிலளித்துள்ள மின்சார வாரிய அதிகாரிகள், ஆன்லைனில் யுபிஐ, நெட் பேங்கிங் ஆகியவை மூலம் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் கிடையாது.

அதே போல் மத்திய அரசின் பீம் (BHIM) செயலி மூலம் கட்டணம் செலுத்தினால் சில சமயங்களில் ஒரு சதவீதம் முதல் 3 சதவீத கட்டணம் வரை சலுகை வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

820 யூனிட்டுக்கு மேல்…

இதுவரை 2 மாதத்தில் 1,275-க்கும் மேல் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு ரூ,10 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வந்தது. அவர்கள் தான் மின்சார அலுவலக கவுண்ட்டர்களில் காசோலை, டி.டி. அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வந்தனர். அவர்கள் ரொக்கமாக செலுத்த முடியாத நிலை இருந்தது.

ஆனால் இனி 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் ஆன்லைன் அல்லது மின் அலுவலகங்களில் காசோலை, டி.டி. மூலம் தான் பணம் செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்கு தான் 820 யூனிட். மற்றபடி வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு இந்த யூனிட் இன்னும் குறையும்.

Tags:    

Similar News