மெரினா ஜோடிக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்
- சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சந்திரமோகன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.
இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கடந்த சிலதினங்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரின் ஜாமின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரமோகன் மட்டும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விடுக்கப்பட்டுள்ளது.