பழனி முருகன் கோவிலில் ஊழியர்கள் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்
- விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது.
- காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள், நூலகர் அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்துவான், தவில் வித்வான், தாள கருவி இசைப்பவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 281 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து பொது அறிவிப்பாணையை உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படவும் இல்லை. ஆகையால் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது.
அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனை என்பது அடிப்படை உரிமை மீறலாகும்.
இந்த நிபந்தனையை அறநிலையத்துறை கமிஷனர் நீக்கி உத்தரவிட வேண்டும். மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.