உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரணை- போலீசாருடன் மலைவாழ் மக்கள் வாக்குவாதம்

Published On 2024-06-30 05:43 GMT   |   Update On 2024-06-30 05:43 GMT
  • கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
  • மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

உடுமலை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன்(40).இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 2பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து ரவிச்சந்திரன், மகேந்திரன் மட்டுமின்றி அதே ஊரை சேர்ந்த லட்சுமணன்(49), செந்தில்குமார்(48), ராமகிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) ஆகியோரும் சாராயம் வாங்கி வந்து கடந்த 27-ந்தேதி குடித்தது தெரியவந்தது. இதில் ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோரை தவிர மற்ற 4 பேருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் சாராயம் குடித்ததால் 2பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் மது குடித்த இடத்தில் ஆய்வு செய்ததில், அங்கு சுகாதாரமற்ற தண்ணீர் இருப்பது தெரியவந்தது. அந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்ததால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த தண்ணீரை போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

இந்தநிலையில் சாராயம் வாங்கிய உடுமலை மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்துக்கு திருப்பூா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார், கோவை மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போலீசார், உடுமலை வனச்சரகா் மணிகண்டன் தலைமையிலான வன அலுவலா்கள் சென்று கள்ளச்சாராயம் ஏதும் விற்கப்படுகிறதா என்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம் முற்றியதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் கிராமத்தில் தங்கி விசாரணையை தொடா்ந்தனா்.

இது குறித்து போலீசார் கூறுகையில் மஞ்சநாயக்கனூா் கிராமத்தில் ஒரு சிலா் அருந்திய சாராயம் மாவடப்பு கிராமத்தில் இருந்துதான் சென்றுள்ளது என தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவடப்பு கிராமத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

Tags:    

Similar News