உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-06-21 10:22 GMT   |   Update On 2023-06-21 10:22 GMT
  • பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு முந்தைய அதிமுக அரசிடம் அளிக்கப்பட்டது.
  • பிழைப்புக்காக சொந்த மண்ணையும், உறவுகளையும் பிரிந்து எங்கெங்கோ சிதறிக் கிடப்பவர்கள் தங்கள் ஊரிலேயே நிலையாகவும், நிம்மதியாகவும் வாழ இந்த திட்டம் ஒன்று போதும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி (சின்னாறு), தும்பல அள்ளி, கேசர்குளி, நாகாவதி, தொப்பையாறு, ஈச்சம்பாடி உள்ளிட்ட 8 அணைக்கட்டுகள் உள்ளன.

இதனால், இவ்வணைகளின் பாசனப் பரப்பு பகுதிகளில் மட்டும் ஓரளவு செழிப்பாக விவசாயம் நடைபெறுகிறது.

மாவட்டத்தின் இதர பகுதிகளில் சிறந்த மண் வளம் இருந்தபோதும் பாசன நீர் வசதி இல்லாததால் பெரும்பகுதி வேளாண் நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாகவே உள்ளன.

இதனால், சொந்த நிலமிருந்தும் வாழ்வாதாரத்துக்காக பல குடும்பங்கள் ஆண்டின் பல மாதங்கள் வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றன.

நிலமுள்ள குடும்பங்களின் நிலையே இவ்வாறு என்றால், விவசாய கூலித் தொழிலாளர்களின் நிலை இன்னும் அவலமாக உள்ளது.

இந்நிலையில், மக்களின் வாழ்வாதார இடப்பெயர்வுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் ஒகேனக்கல் காவிரியில் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்து வருகிறது.

கனமழைக் காலங்களில் கடலுக்கு செல்லும் பல டிஎம்சி நீரில் வெறும் 3 டிஎம்சி நீரை மட்டும் நீரேற்றும் திட்டம் மூலம் பென்னாகரம் அருகிலுள்ள கெண்டையன் குட்டை ஏரியில் நிறைத்து அங்கிருந்து தரைவழிக் கால்வாய்கள் மூலம் மாவட்டத்தின் பெரும்பகுதி நீர்நிலைகளை நிரப்ப வேண்டும் என்பதே இந்த திட்டம்.

இத்திட்டம் கோரி பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு முந்தைய அதிமுக அரசிடம் அளிக்கப்பட்டது.

அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், திட்டம் ஏட்டளவிலேயே இருந்து வருகிறது.

இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் சிலர் கூறும்போது, 'ஒகேனக்கல் உபரி நீர் திட்ட கோரிக்கை குறித்த உத்தரவாதங்களை முந்தைய அரசும், தற்போதைய அரசும் மாவட்ட மக்களை ஏமாற்றி வருவதாக உணர்கிறோம்.

பிழைப்புக்காக சொந்த மண்ணையும், உறவுகளையும் பிரிந்து எங்கெங்கோ சிதறிக் கிடப்பவர்கள் தங்கள் ஊரிலேயே நிலையாகவும், நிம்மதியாகவும் வாழ இந்த திட்டம் ஒன்று போதும். எனவே, இத்திட்டத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்' என்றனர்.

Tags:    

Similar News