உள்ளூர் செய்திகள்

தொடா் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published On 2024-08-26 04:57 GMT   |   Update On 2024-08-26 04:57 GMT
  • சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
  • மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊட்டி:

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை காண கேரளா, கா்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியிலுள்ள உலகப்புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை ஆகிய தொடா் விடுமுறையையொட்டி ஊட்டி சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

அதிலும் குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள வானுயா்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் வண்ண-வண்ண மலா்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா்.

மேலும் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி உற்சாகமாக படகு சவாரி செய்து விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழையின் காரணமாக வெறிச்சோடி இருந்த சுற்றுலா மையங்கள், தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகிறது.

மேலும் ஊட்டிக்கு வந்து செல்பவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குன்னுார்-ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News