கடையம் அருகே வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்-புதுமாப்பிள்ளை- பெற்றோருக்கு வலைவீச்சு
- உமைய பார்வதி மீது நவஜோதி இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார்.
- மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் -உமைய பார்வதி தம்பதிக்கும், பன்னீர் - பாப்பம் மாள் தம்பதிக்கும் சுமார் 6 மாத காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களான இவர்க ளுக்குள் அவ்வப்போது சிறு, சிறு தகராறு நடந்து வந்துள்ளது.
பெண் மீது தாக்குதல்
இந்நிலையில் கடந்த 20-ந்தேதி மாலை தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த உமைய பார்வதி மீது பன்னீர் என்பவரது மகன் நவஜோதி (வயது27) இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திர மடைந்த நவஜோதி, உமைய பார்வதியை தாக்கி உள்ளார். தொடர்ந்து நவஜோதியுடன் அவரது தந்தை பன்னீர், தாய் பாப்பம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து, வீட்டுக்குள் சென்ற உமைய பார்வதியை சரமாரியாக அடித்து உதைத்ததோடு செங்கல்லை கொண்டு அடித்துள்ளனர்.
இதில் காயங்களுடன் மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடையம் போலீசார் விசாரணை நடத்தி பன்னீர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தலைமறைவான நவஜோதிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது.