ஓசூர் அருகே போலி டாக்டர் கைது: கிளினிக்-2 மருந்துகடைகளுக்கு சீல்
- போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.
- உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.
தளி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பருவநள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது54). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் ஒரு வீடு எடுத்து அருணாச்சலா மெடிக்கல் என்ற கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் ஆங்கில கல்வி ஏதும் பயிலாமல் அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்துள்ளார்.
இதுகுறித்து இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கிருஷ்ணகிரி மருத்துவர் தர்மருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமையில் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி, கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் இளம் பிரதி உள்பட மருத்துவ குழுவினர் கோட்டையூர் கிராமத்திற்கு சென்று அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அங்கமுத்து 10 வகுப்பு வரை படித்துவிட்டு அரசு விதிகளுக்கு புறம்பாக போலியாக பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவ குழுவினர் போலி மருத்துவர் அங்கமுத்துவை பிடித்து அஞ்சடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவர் நடத்தி வந்த தனியார் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.
அதேபோல், கோட்டை யூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் அருணாச்சலா ஆகிய இரு மருந்து கடைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அங்கு உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.