உள்ளூர் செய்திகள்

நோய் தாக்குதலில் இருந்து தென்னையை பாதுகாப்பது எப்படி?

Published On 2023-05-08 07:53 GMT   |   Update On 2023-05-08 07:53 GMT
  • பாதிக்கப்பட்ட மரங்களை பராமரித்தல் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.
  • தென்னந்தோப்பில் பசுந்தாள் உரம் பயிர் வளர்ப்பு, அங்கக கழிவு சுழற்சி பற்றி விவசாயிகளிடம் கூறினார்.

பேராவூரணி:

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை ஒரு முக்கிய பயிராக ஏறத்தாழ 7500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு முக்கி யமான வாழ்வாதாரமாக தென்னை விவசாயம் இருந்து வருகிறது.

சமீப காலமாக தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு கொண்டி ருக்கிறார்கள்.

சென்னை வேளாண்மை உற்பத்தி ஆணையர், செயலர் மற்றும் வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தலுக்கிணங்க வேளாண்மை உழவர் நலத்துறை தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் வேப்பங்குளம் கூட்டாக ஒன்று சேர்ந்து தீவிர வயல் ஆய்வு மருங்கப்பள்ளம், நாடியம் மற்றும் இரண்டாம்புளிக்காடு ஆகிய கிராமங்களில் மேற்கொண்டனர்.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் விஞ்ஞானி டாக்டர் அருண்குமார், தென்னையை தாக்கும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை கருத்தலை புழுக்களை பற்றியும், தஞ்சாவூர் வாடல் நோய் (அடித்தண்டழுகல் நோய்), கேரளா மாடல் நோய், குறுத்தழுகல் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் இடி மின்னலினால் பாதிக்கப்பட்ட மரங்களை பராமரித்தல் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.

மேலும் தென்னை நடவு முறை, சொட்டு நீர் பாசனம், ஊடுபயிர்கள், தென்னையில் கலப்பு பண்ணை அமைத்தல், தென்னை மட்டைகள், ஓலைகள், தென்னை நார்க்கழிவு புதைத்தல், தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, நுண்ணூட்டச் சத்துகளின் முக்கியத்துவம், தென்னை டானிக், தென்னைக்கு நுண்ணுயிர் உர பரிந்துரைகள், தென்னந்தோப்பில் பசுந்தாள் உரம் பயிர் வளர்ப்பு, அங்கக கழிவு சுழற்சி பற்றி விவசாயிகளிடம் விரிவாக எடுத்து கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொறுப்பு), துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News