நான் தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயம்- ரகளை செய்த முன்னாள் ராணுவ வீரர்
- திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
- நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.
தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.