அறிவியல் கண்காட்சி போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் சாதனை
- போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
தென்காசி:
நெல்லை பிரான்சிஸ் சேவியர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, செயல்திட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர், ரோஸ்மேரி, பிரான்சிஸ் சேவியர், டான்பாஸ்கோ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் நித்திஸ், ஜெயதர்ஷன், ஸ்ரீஜித் ஆகியோர் கழிவறை தொட்டியை சுத்திகரிக்கும் வேளையில் ஏற்படுகின்ற உயிரிழப்பைத் தடுக்கும் விதமான செயல்திட்டத்தை வடிவமைத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரான்சிஸ் சேவியர்ஸ் கல்லூரி சார்பாக பாராட்டு சான்றிதழும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.