கள்ளக்காதலுக்கு இடையூறு: வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை ஊனமாக்க மனைவி செய்த கொடூர செயல்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.
மதுரை :
மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.
எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.