அம்மாபேட்டையில் ரூ. 22 லட்சம் கடனுக்கு ரூ.52 லட்சம் கேட்டவர் மீது வழக்கு
சேலம்:
சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 48). இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார் .
இவர் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் ( 50) என்பவரிடம் ரூ. 22 லட்ச ரூபாயை 2018-ம் ஆண்டு கடனாகப பெற்றார். அப்போது ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திட்டும், மேலும் அவருக்கு சொந்தமாக உள்ள 2,000 சதுர அடி நிலத்தை அடமானமாக வழங்கியுள்ளார்.
மாதம்தோறும் மணிவண்ணன் வங்கி கணக்கில் வட்டியை செலுத்தி வந்தார். ஆனால் வருமான வரி பிரச்சனை வரும் என்பதால் ரொக்கமாக தரும்படி மணிவண்ணன் கேட்டுள்ளார். அதன்படி 14 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளார்.
இதையடுத்து தான் ஏற்கனவே வழங்கிய ஆவணங்களை கேட்டபோது கூடுதலாக 52 லட்சம் ரூபாய் தந்தால் மட்டுமே வழங்க முடியும், அத்துடன் ஜாமீனாக வழங்கிய அடமான நிலத்தையும் தர இயலாது என மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்தை அதிகரிக்கும் நோக்கில் சுத்தம் செய்து வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த 4-ம் தேதி ஸ்ரீதரன் அம்மா பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதனை விசாரித்த போலீசார், மணிவண்ணன் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.