உள்ளூர் செய்திகள்

தண்ணீர் லாரி மோதியதில் தலை துண்டாகி பெண் பலி- கணவர் கண்முன் பயங்கரம்

Published On 2023-07-31 09:41 GMT   |   Update On 2023-07-31 09:41 GMT
  • சாலையோரம் படுத்து இருந்த மாடு மீது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் உரசியது.
  • மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி அவர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

தாம்பரம்:

பல்லாவரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நாகம்மாள்(வயது48).

கணவன்-மனைவி இருவரும் திருமுடிவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் படுத்து இருந்த மாடு மீது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் சரிந்தது. இதில் சின்னையாவும், அவரது மனைவி நாகம்மாளும் மோட்டார் சைக்கிளோடு கிழே விழுந்தனர்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் நாகம்மாள் சிக்கிக்கொண்டார். இதில் அவரது தலை துண்டாகி தனியாக வீசப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்பு நாகம்மாள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்ட கணவர் சின்னையா கதறி துடித்தார். மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி அவர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பகுதியில் சாலையோரங்களில் அடிக்கடி மாடுகள் படுத்து கிடப்பதும், சுற்றுவதும் அதிக அளவில் உள்ளது. இது பற்றி வாகன ஓட்டிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை கால்நடைகள் சாலைகளில் சுற்றுவதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த சாலையில் குறுக்கே செல்லும் மாடுகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனை தடுக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் இது போன்ற விபத்தில் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News