பேராவூரணி அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
- போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
- லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக தஞ்சை சிறப்பு போலீஸ் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீசார் பேராவூரணி முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி- ஊமத்தநாடு சாலையில் பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 300 கிலோ ஆகும்.
தொடர்ந்து, போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 44), தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (34), அம்மணிச்சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.