நல்லம்பள்ளி அருகே பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகள் கொள்ளை
- பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எர்ரப்பட்டி பொதுப்பணித்துறை காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பெங்களூரில் எலக்ட்ரிகல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி (30). இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மேல் மாடியில் மகேஸ்வரி (27) இவரது கணவர் அருண் தம்பதிகள், வாடகை இருந்து வருகின்றனர். இவர்களும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்வீடு மற்றும் மேல் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் வேறு்எவரும் இல்லை.
வேலை முடிந்து மீண்டும் மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது இருவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வள்ளி உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
அதே போல் மேல் மாடியில் குடியிருந்து வரும் மகேஸ்வரி வீட்டில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பிலான 13 பவுன் நகைகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு இவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து இரு குடும்பத்தினரும் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவேறு வழக்குகளாக பதிவு செய்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவை சேகரித்து அதன் மூலமாக விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.