கோவையில் அம்மன் தலை மீது அமர்ந்து காட்சி தரும் பச்சைக்கிளி
- பம்பை இசை, பூஜையின் போதும் கிளி தலை மீது இருந்து நகருவதே கிடையாது.
- மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதா கவும் கதை வரலாறுகள் உள்ளது.
நீலாம்பூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது இருகூர் கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோவில் உள்ளது.
இந்த மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதாகவும் கதை வரலாறுகள் உள்ளது.
மாதந்தோறும் அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர வெள்ளி, செவ்வாய் தினங்களிலும் பூஜைகள் நடைபெறும்.
இந்த கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களும் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்வது வழக்கம். இதனை பக்தர்களும் தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டும் அதே போல ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜைகளின் போது, மாசாணியம்மன் தலையிலும், வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி ஊஞ்சலிலும் கிளி அமர்ந்து தரிசனம் தந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கிளி அமர்ந்து தரிசனம் கொடுத்து வருகிறது.
இதனை காண்பதற்காகவும், கிளி அம்மன் தலையில் அமர்ந்திருப்பதை தரிசிப்பதற்காகவும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.