கள்ளக்குறிச்சியில் பள்ளி பஸ்களை ஆய்வு செய்த கலெக்டர்
- கள்ளக்குறிச்சியில் பள்ளி பஸ்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி பஸ் ஆய்வு முகாம் நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பள்ளி பஸ்களை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களில்படிகள், அவசர கால கதவு, முதலுதவி பெட்டகம், தீயணைப்புகருவி, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 வகையான காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேருந்தினை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 490 பள்ளி பஸ்கள் உள்ளது. இதில் 326 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 24 பஸ்கள் மறுஆய்விற்கு உட்படுத்திடமாறு பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டது எனவும், மீதமுள்ள பஸ்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறினார். முன்னதாக தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.